/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்மாற்றி அமைப்பதில் அலட்சியம்: சரமாரி புகார்
/
மின்மாற்றி அமைப்பதில் அலட்சியம்: சரமாரி புகார்
ADDED : ஜூலை 12, 2024 02:14 AM

திருத்தணி:திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று செயற்பொறியாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
இதில் திருவள்ளூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சேகர் பங்கேற்று, விவசாயிகள், மின்நுகர்வோர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
அப்போது, எரும்பி துணை மின்நிலையம் உட்பட்ட கோளேரி கிராம விவசாயி வாசு தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர், 'எங்கள் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் தடுக்க, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, புதிய மின்மாற்றி அமைக்க மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
ஆனால், மின்மாற்றி அமைக்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்' என தெரிவித்தனர். பாலாபுரம் பகுதி மக்கள் எங்கள் பகுதியில் புதிய பீடர் அமைப்பதற்கு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனிநபர் ஒருவர், பீடருக்கு செல்லும், பத்து மின்கம்பங்கள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அம்மையார்குப்பம் நெசவாளர்கள், பழைய மின்கம்பங்கள் அகற்றி புதிய மின்கம்பங்கள் பொருத்த வேண்டும்.
மனுக்களை பெற்ற மேற்பார்வை பொறியாளர் சேகர் உங்கள் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மின்மாற்றி சேதம்
பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் காலனி கிராமத்தில், குடியிருப்புகளின் அருகில் உள்ள மின்மாற்றியில் இருந்து, 100க்கும் அதிமான வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்த மின்மாற்றி சேதம் அடைந்து குடியிருப்புகளின் மீது விழும் நிலையில் உள்ளது. மின்மாற்றி துருப்பிடித்தும், அதை தாங்கும் சிமென்ட் கம்பங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து எலும்புக்கூடாகவும் காட்சியளிக்கிறது. அதில் உள்ள இரும்பு தளவாடங்களும் துரு பிடித்துள்ளன.
சிமென்ட் கம்பங்கள் அதன் உறுதித் தன்மையை இழந்து பலவீனமாக இருப்பதால், பலத்த காற்று வீசினால் மின்கம்பம் உடைந்து, மின்மாற்றி குடியிருப்புகளின் மீது விழுந்து பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், குடியிருப்புகளில் இருப்பவர்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.
மின்மாற்றி சேதம் குறித்து மின்வாரியத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போது அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், மின்மாற்றி விழுந்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், அதை சீரமைக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.