/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீமாவரத்தில் ஆற்றின் கரையை சீரமைப்பதில் அலட்சியம்
/
சீமாவரத்தில் ஆற்றின் கரையை சீரமைப்பதில் அலட்சியம்
ADDED : ஜூன் 23, 2024 04:22 AM

மீஞ்சூர் : மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதி வழியாக கொசஸ்தலை ஆறு பயணித்து, எண்ணுார் கடலில் கலக்கிறது. இங்குள்ள வல்லுார் அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.
இந்நிலையில், வல்லுார் அணைக்கட்டு மற்றும் மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள ஆற்றுப்பாலம் ஆகியவற்றிக்கு இடையில் உள்ள ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் மணல் மற்றும் சவுடு மண் திருடப்படுகிறது. இதற்காக, ஆற்றின் ஒரு கரைப் பகுதியை வெட்டி டிராக்டர், ஜே.சி.பி., இயந்திரங்கள் செல்வதற்கு ஏற்ப பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆற்றுக்கரை வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதால், வெள்ளப்பெருக்கு காலங்களில், கரை இல்லாத பகுதி வழியாக ஆற்று நீர் வெளியேறி, மீஞ்சூர், சீமாவரம், மேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், நடவடிக்கை இன்றி கிடக்கிறது. இரவு நேரங்களில் மணல், சவுடு மண் திருட்டும் தொடர்கிறது.
கரையை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும், அதை சீரமைத்து அசம்பாவிதங்களை தடுப்பதிலும் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மணல் திருட்டிற்காக வெட்டி சேதப்படுத்தப்பட்ட ஆற்றின் கரையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.