/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் அலட்சியம்
/
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் அலட்சியம்
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் அலட்சியம்
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் அலட்சியம்
ADDED : மார் 02, 2025 11:53 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியில், தாமரை ஏரியின் உபரிநீர் கால்வாயில் வரும் கழிவுநீர், வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.
அதற்கு நிரந்தர தீர்வான கால்வாய் அமைக்கும் பணியை செயல்படுத்தாமல், பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்வதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமாக, 48 ஏக்கர் பரப்பு கொண்ட தாமரை ஏரி, நீர்வளத் துறையினர் பராமரிப்பில் உள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் கலப்பால், தாமரை ஏரி மற்றும் அதன் உபரிநீர் கால்வாயில் எப்போதும் கழிவுநீர் தேங்கி காணப்படும்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே கால்வாய் செல்வதால், அப்பகுதி முழுதும் கழிவுநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக, ரெட்டம்பேடு சாலையின் குறுக்கே, நீதிமன்றம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள் முழுதும் கழிவுநீர் தேங்கியுள்ளது.
கும்மிடிப்பூண்டி நகரை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, சுகாதாரமற்ற சூழலில் நகரவாசிகள் வசித்து வருகின்றனர்.
மேலும், குடியிருப்புவாசிகள் அனைவரும் துர்நாற்றத்திற்கு இடையே வசிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் தேக்கத்திற்கு தீர்வு காண, ரெட்டம்பேடு சாலையில் கழிவுநீர் தேங்கும் இடத்தில் இருந்து, பேரூராட்சி அலுவலகம் வழியாக மேட்டு தெரு ஓடை வரை கால்வாய் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்து வருவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோடைக்காலத்திற்குள், கால்வாய் பணியை துரிதமாக மேற்கொண்டு, சுகாதாரமற்ற சூழலில் இருந்து பகுதிவாசிகளை பாதுகாக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.