தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'அம்மா' உணவகங்களில் இட்லி, சப்பாத்தி... கிடையாது!மூன்று வேளையும் கலவை சாதம் விற்பனை

'அம்மா' உணவகங்களில் இட்லி, சப்பாத்தி... கிடையாது!மூன்று வேளையும் கலவை சாதம் விற்பனை

'அம்மா' உணவகங்களில் இட்லி, சப்பாத்தி... கிடையாது!மூன்று வேளையும் கலவை சாதம் விற்பனை


UPDATED : ஏப் 28, 2026 10:06 PM

ADDED : ஏப் 28, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2026 10:06 PM ADDED : ஏப் 28, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சமையல் 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, 'அம்மா' உணவகங்களில், இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று வேளையும் கலவை சாதம் மட்டும் விற்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில், 383 'அம்மா' உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில், காலையில் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு பொங்கல்; மதியம் 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு லெமன் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம்; இரவில் 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்திகள் வழங்கப்பட்டு வந்தது.

குறைந்த விலையில், தரமான உணவு கிடைத்ததால், ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர், ஐ.டி., பிரிவு ஊழியர்கள் வரை இந்த உணவகங்களை நாடினர். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

குறிப்பாக, 'ஆன்லைன்' உணவு டெலிவரி ஊழியர்கள் பலர், அம்மா உணவகங்களை நம்பியே உள்ளனர். பேரிடர் காலங்களிலும், அம்மா உணவகங்கள் தான், பெரும்பாலானோரின் பசியை போக்குகின்றன.

'அம்மா' உணவகங்கள் வாயிலாக ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டாலும், ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் வகையில், அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக சமையல் காஸ் தட்டுப்பாடு காரணமாக, அம்மா உணவகங்களின் செயல்பாடுகளில் தள்ளாட்டம் ஏற்பட்டது. வேறு வழியின்றி சில அம்மா உணவகங்களில், விறகு அடுப்புகள் பயன்படுத்தப்பட்டன; அது விமர்சனத்துக்கு உள்ளானது.

எனவே, விறகு அடுப்புக்கு பதிலாக, 'காஸ்' சிலிண்டர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காததால், அம்மா உணவகத்தில் வழக்கமாக கொடுக்கப்படும் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தற்போது, காலையில் பொங்கல், மதியம் தயிர் சாதம், இரவு தக்காளி சாதம் ஆகியவை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாம்பார் சாதம், சப்பாத்தி ஆகியவை நிறுத்தப்பட்டு விட்டன.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு தினமும், 300க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, 150 என்ற அளவில்தான், அம்மா உணவகங்களுக்கு காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதேநேரம், நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போதிலும், அம்மா உணவகங்களை மூடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஒவ்வொரு உணவகத்திலும் சமைக்கும் நிலை தற்போது இல்லை. ஒரு வார்டில் குறிப்பிட்ட சில இடங்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டு, 18க்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

இதன் வாயிலாக, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்தாலும், தொடர்ந்து அம்மா உணவகங்கள் தடையின்றி செயல்பட்டு வருகின்றன. காஸ் தட்டுப்பாடு சீரானதும், அம்மா உணவகங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து உணவு வகைகளும் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருவள்ளூரில் அம்மா உணவகம் மூடல் திருவள்ளூர் நகராட்சியில், அரசு மருத்துவமனை மற்றும் பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில், கடந்த 2016ம் ஆண்டு முதல் அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. குறைந்த விலையில், காலை இட்லி, பொங்கல், மதியம் சாம்பார், தயிர் சாதம் மற்றும் இரவு சப்பாத்தி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2021ம் ஆண்டில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக, பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. அப்போது, அம்மா உணவகமும் அகற்றப்பட்டது. அதன்பின், அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரியகுப்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் தற்போதும் செயல்பட்டு வருகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us