ADDED : ஜூன் 29, 2026 03:53 PM
மேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துார் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார் ஊராட்சி. இங்கு, சாலை சீரமைப்பு, கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கூறப்படுகிறது. அதனால், பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, நேற்று அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கடம்பத்துார் ஒன்றிய அலுவலர்கள் ரவி, நடராஜன் ஆகியோர் விரைந்து வந்து, மக்களிடம் சமாதான பேச்சு நடத்தி, ‘அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்’ என, உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
