/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலைத்துறை ‛அடாவடி' மின் தடையால் மக்கள் அவதி
/
நெடுஞ்சாலைத்துறை ‛அடாவடி' மின் தடையால் மக்கள் அவதி
நெடுஞ்சாலைத்துறை ‛அடாவடி' மின் தடையால் மக்கள் அவதி
நெடுஞ்சாலைத்துறை ‛அடாவடி' மின் தடையால் மக்கள் அவதி
ADDED : மே 30, 2024 12:42 AM

செங்குன்றம்,:நெடுஞ்சாலைத்துறையின் புதிய மழைநீர் வடிகால் பணிக்காக, பள்ளம் வெட்டியதில், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், பல மணி நேர மின் தடையில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனர்.
சென்னை செங்குன்றம் ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல், தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி, சோத்துப்பாக்கம் சாலையின் இரு பக்கமும், 2.4 கி.மீ., துாரத்திற்கு, 13 கோடி ரூபாய் மதிப்பில், 7 அடி அகலம், 7 அடி ஆழம் கொண்ட புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஏப்ரல் மாதம் துவங்கியது.
அந்த பணிக்காக, நெடுஞ்சாலை துறையினர், மின் இணைப்பு, உள்ளாட்சி குடிநீர் குழாய் இணைப்புகள் குறித்து, அறிந்து கொள்ள, மின் வாரியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறுவதில்லை. தங்கள் விருப்பம் போல், பள்ளம் வெட்டுவதால், மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பொது தொலைபேசி இணைப்பு, இன்டர்நெட் இணைப்பு ஆகியவை சேதமடைந்து, விநியோகம் துண்டிக்கப்படுகிறது.
நேற்று முன் தினம் மாலை, 4:00 மணி அளவில், தீர்த்தகிரையம்பட்டு, சோத்துப்பாக்கம் சாலை, துணை மின் அலுவலகம் அருகே, 33 கிலோ வாட் திறனுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதனால், பாடியநல்லுார் சுற்றுவட்டாரங்களில் மின் தடையாகி மக்கள் அவதிப்பட்டனர். துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை, சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் சீரமைத்தனர்.
அதனால், இரவு, 10:00 மணி அளவில் மின் வினியோகம் சீரானது.
அப்போது, மின் வாரியத்தினர், நெடுஞ்சாலைத்துறையினரிடம், 'இது போன்ற பணிகளை, எங்கள் ஊழியரின் மேற்பார்யைில் செய்தால், மின் இணைப்புகள் சேதமடைந்து, அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தவிர்க்கலாம்' என்றனர்.
அதை அலட்சியம் செய்த நெடுஞ்சாலைத்துறையினர், நேற்று காலை, 10:15 மணி அளவில், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, மழைநீர் வடிகாலுக்கான பள்ளம் வெட்டும் போது, மீண்டும் 33 கிலோ வாட் திறனுக்கான மின் இணைப்பை, மூன்று இடங்களில், சேதப்படுத்தினர்.
அதனால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு, தீர்த்தகிரையம்பட்டு, பாடியநல்லுார் சுற்றுவட்டாரங்களில், பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கோடையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் அவதிப்பட்ட மக்கள், மின் வாரிய அதிகாரிகளிடம் தகராறு செய்தனர்.
இப்பிரச்னையால், மின் வாரியத்தினருக்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, நெடுஞ்சாலைத்துறையினர், 'ஒவ்வொரு நாளும் உங்கள் அனுமதிக்காக காத்திருக்க முடியாது. எங்களுக்கு, எங்கள் வேலைதான் முக்கியம். சேதமடைந்த மின் இணைப்புகளை, நீங்கள்தான் சரி செய்ய வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை' என்றனர்.
வாக்குவாதத்திற்கு இடையே, மூன்று இடங்களில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை, மின் வாரியத்தினர் சீரமைத்தனர். அந்த பணி, இரவு, 7:00 மணி வரை நீடித்தது.
இதனால், கோடையின் கடும் வெப்பத்தில் காற்று வசதியின்றி அவதிப்பட்ட மக்கள், கடும் அதிருப்தி அடைந்தனர்.