/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ரயில் நிலைய சாலையில் தேங்கும் மழைநீர்
/
திருவள்ளூர் ரயில் நிலைய சாலையில் தேங்கும் மழைநீர்
ADDED : ஆக 31, 2024 11:15 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில் நிலைய சாலையில், மழைநீர் தேங்குவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு தினமும், ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்கின்றனர்.
ரயில் நிலையத்தில் இருந்து பெரியகுப்பம் மேம்பாலம் வழியாக, லால் பகதுார் சாஸ்திரி சாலையில் ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.
ரயில் நிலையம் முன்பாக, புறக்காவல் நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து, லால்பகதுார் சாஸ்திரி சாலை செல்லும் வழியில், மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
இந்த தண்ணீரை, அவ்வப்போது நகராட்சி ஊழியர்கள் அகற்றினாலும், ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், இவ்வாறு குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் பயணியரும், அப்பகுதிவாசிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் திருவள்ளூர் நகரில் பலத்த மழை பெய்ததால், வழக்கம் போல் ரயில் நிலைய புறக்காவல் நிலையம் முன்பாக, தண்ணீர் தேங்கியது.
இதை திருவள்ளூர் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றினர்.
இருப்பினும் தேங்கிய மழைநீரை குழாய் வழியாக, மழைநீர் கால்வாயில் இணைத்தால் தான் நிரந்தர தீர்வாக அமையும்.
இதனை நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகளும், ரயில் பயணியரும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.