/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகற்றப்பட்ட நிழற்குடை: 3 மாதமாக பயணியர் அவதி
/
அகற்றப்பட்ட நிழற்குடை: 3 மாதமாக பயணியர் அவதி
ADDED : ஆக 25, 2024 11:14 PM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், கல்பட்டு அருகே ஆதிவராகபுரம் கூட்டு சாலை உள்ளது. இந்த வழியாக ஆதிவராகபுரம், ஆதிவராகபுரம் காலனி, மடுகூர், அம்மனேரி, ஸ்ரீகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் சோளிங்கருக்கு வந்து செல்கின்றனர்.
ஆதிவராகபுரம் கூட்டு சாலையில் இருந்து, பயணியர் ஆட்டோக்களில் சோளிங்கருக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, இந்த கூட்டு சாலையில் நிழற்குடை கட்டப்பட்டிருந்தது.
பழுதடைந்த இந்த நிழற்குடை, மூன்று மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. ஆனால், மீண்டும் கட்டப்படவில்லை. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் நிழற்குடை இருந்த இடத்தில், விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விளம்பர பதாகை சவுக்கு கட்டைகளில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த காற்று அடித்தால், கீழே விழந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.
எனவே, பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். மேலும், விளம்பர பதாகைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

