/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சத்திரம் கால்வாய் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை
/
சத்திரம் கால்வாய் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை
ADDED : செப் 09, 2024 06:57 AM

பொன்னேரி: பொன்னேரி - பெரும்பேடு சாலை, சத்திரம் கிராமத்தில் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலம் சேதம் அடைந்து கிடக்கிறது.
பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் இல்லாமலும், மரம், செடிகள் வளர்ந்து உள்ளன. பாலத்தின் கீழ்பகுதிகளும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது.
தடுப்பு சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். வாகன ஓட்டிகள் சிறிது இடறினாலும், 10அடி ஆழத்தில் விழுந்து அசம்பாவிதங்களில் சிக்கும் நிலை உள்ளது.
லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து பெரும்பேடு ஏரிக்கு இந்த கால்வாய் வழியாகவே மழைநீர் கொண்டு செல்லப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் கால்வாயில் ஆர்ப்பரித்து செல்லும்போது, பாலம் மேலும் பலவீனம் அடைகிறது.
பாலம் உடைந்தால், இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், 5கி.மீ., சுற்றிக்கொண்டு பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும். பிரசித்தி பெற்ற பெரும்பேடு முத்துகுமாரசாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
பாலம் பலவீனம் அடைந்து உள்ளதால், உடனடியாக அதை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.