/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நவீன எரிவாயு தகனமேடை அருகில் தேங்கிய மழைநீரால் நோய் அபாயம்
/
நவீன எரிவாயு தகனமேடை அருகில் தேங்கிய மழைநீரால் நோய் அபாயம்
நவீன எரிவாயு தகனமேடை அருகில் தேங்கிய மழைநீரால் நோய் அபாயம்
நவீன எரிவாயு தகனமேடை அருகில் தேங்கிய மழைநீரால் நோய் அபாயம்
ADDED : ஆக 13, 2024 09:15 PM

திருவள்ளூர்: தலக்காஞ்சேரி நவீன எரிவாயு தகன மேடை அருகில், தேங்கிய மழைநீரால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில் 65,0000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட, ஈக்காடு சாலை, தலக்காஞ்சேரி குப்பை கிடங்கு அருகில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, இரண்டு எரிவாயு தகன மேடை, கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதி உள்ளது. சமீபத்தில், இந்த எரிவாயு தகன மேடை, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில், மழை நீர் வெளியேறும் வகையில் கால்வாய் வசதி இங்கு இல்லை. இதனால், கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழைநீர், எரிவாயு தகன மேடையைச் சுற்றிலும், குளம் போல் தேங்கி உள்ளது.
அருகிலேயே, குப்பை கிடங்களில் மலை போல் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுநீர் காரணமாக கொசு உற்பத்தியாகி, நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டது.
எனவே, நகராட்சி நிர்வாகம் தேங்கிய மழைநீரை அகற்றவும், முறையான மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சமுதாய கூடம்
திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு கிராமம் அருகே, ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தில் கால்நடை மருந்தகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் சமுதாய கூடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டு உள்ளன.
மேற்கண்ட இடங்களுக்கு செல்வதற்கு முறையாக சாலை வசதி ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கால்நடை மருந்தகத்திற்கு செல்லும் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளன.
இதனால் விவசாயிகள் கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்வதற்கும் முடியாமல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட அலுவலகம் மற்றும் கால்நடை மருந்தகத்திற்கு செல்வதற்கு முறையாக தார்ச்சாலை அமைத்து தரவேண்டும். மேலும் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.
தாடூர் ஏரி
திருத்தணி ஒன்றியம், இ.என்.கண்டிகை கிராமத்தில் புதுத்தெருவில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த தெருவின் அருகே மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் உள்ளது. மழை பெய்யும் மழைநீர் சிறுபாலத்தின் வழியாக தண்ணீர் வெளியேறி தலையாறிதாங்கல் மற்றும் தாடூர் ஏரிக்கு செல்லும்.
இந்நிலையில் தனிநபர் ஒருவர் சிறு பாலம் அருகே மழைநீர் வரத்து கால்வாய் ஆக்கிரமித்து திருமண மண்டபம் கட்டி வருவதால் மழைநீர் வெளியே செல்ல முடியவில்லை. இதனால் தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து பலமுறை வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் தெருவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் மாணவர்கள் இறங்கி நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு அகற்றி மழைநீர் வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.