/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் ஒன்றியத்தில் 10 ஆண்டுகளாக சீரமைக்காத சாலைகள்: ஓட்டு கேட்டு வருபவர்களை வறுத்தெடுக்க தயாராகும் வாக்காளர்கள்
/
மீஞ்சூர் ஒன்றியத்தில் 10 ஆண்டுகளாக சீரமைக்காத சாலைகள்: ஓட்டு கேட்டு வருபவர்களை வறுத்தெடுக்க தயாராகும் வாக்காளர்கள்
மீஞ்சூர் ஒன்றியத்தில் 10 ஆண்டுகளாக சீரமைக்காத சாலைகள்: ஓட்டு கேட்டு வருபவர்களை வறுத்தெடுக்க தயாராகும் வாக்காளர்கள்
மீஞ்சூர் ஒன்றியத்தில் 10 ஆண்டுகளாக சீரமைக்காத சாலைகள்: ஓட்டு கேட்டு வருபவர்களை வறுத்தெடுக்க தயாராகும் வாக்காளர்கள்
ADDED : மார் 28, 2024 08:46 PM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்தில், 48 கி.மீ., தொலைவு துாரம் கொண்ட, 14 கிராமப்புற சாலைகள், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பதால், கிராமவாசிகள் அதிருப்தியில் இருப்பதுடன், லோக்சபா தேர்தலில் கட்சியினருக்கு பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில், தெருச்சாலைகளை ஊராட்சி நிர்வாகமும், கிராமங்களுக்கு இடையான சாலைகளை ஒன்றிய நிர்வாகமும் பராமரிக்க வேண்டும்.
இதில், பழவேற்காடு லைட்ஹவுஸ் - காட்டுப்பள்ளி, மெதுார் - விடதண்டலம், காட்டூர் - ஆண்டார்மடம் உள்ளிட்ட, 14 சாலைகள் கடந்த, 10ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளன.
சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கிறது. மழை பெய்தால் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் மாறுகிறது. வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
குறிப்பாக பழவேற்காடு லைட்ஹவுஸ்குப்பம் - காட்டுப்பள்ளி இடையேயான சாலையில், 15 மீனவ கிராமங்கள் உள்ளன. இச்சாலை முழுதும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மீனவ கிராமத்தினர் தினம் தினம் சிரமத்துடன் பல்லாங்குழியான சாலைகளில் பயணிக்கின்றனர்
இதுபோன்று மெதுார் - விடதண்டலம் இடையேயான சாலை சீரமைத்து தரக்கோரி, கிராமவாசிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டும் நடவடிக்கை இன்றி உள்ளது.
சாலைகளை சீரமைத்து தரக்கோரி அவற்றை அன்றாடம் பயன்படுத்தும், 70க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள் அவ்வப்போது ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இன்றி இல்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு, ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வந்த, 47.89 கி.மீ., தொலைவிற்கான, மேற்கண்ட, 14 கிராமப்புற சாலைகளை மாநில நெடுஞ்சாலைத் துறையின் இதர மாவட்ட சாலைகள் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் இவை ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், இனி அத்துறையினர் தான் சாலைகளை சீரமைக்க வேண்டும் என மீஞ்சூர் ஒன்றியம் கைவிரித்தது. நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்டால், இதற்காக நிதி ஒதுக்கீடு செய்தால் தான் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கிறது. ஒவ்வொரு சாலையும், சீரமைத்து, 10 முதல், 15ஆண்டுகள் வரை ஆன நிலையில், கிராமவாசிகள் விரக்தி அடைந்து உள்ளனர்.
தேர்தல் நேரங்களில் வரும் அரசியல் கட்சியினர், சாலைகளை சீரமைத்து தருவதாக வாக்குறுதிகளை அள்ளிவீசுவதாகவும், வெற்றி பெற்றபின், நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் ஆதங்கப்படுகின்றனர்.
தற்போது லோக்சபா தேர்தலுக்கு தயாராகி உள்ள அரசியல் கட்சியினருக்கு, தகுந்த பாடம் புகட்ட கிராமவாசிகள் தயாராகி வருகின்றனர்.
கிராமங்களுக்கு ஓட்டு கேட்டு வரும் ஆண்ட, ஆளும் கட்சிகளை வறுத்தெடுக்கவும் தயார் நிலையில் உள்ளனர். பல ஆண்டுகளாக சிரமான பயணம் மேற்கொள்ளும் கிராமவாசிகளின் அதிருப்தி லோக்சபா தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

