/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெப்பத்தால் எரிந்த சீத்தஞ்சேரி காடு
/
வெப்பத்தால் எரிந்த சீத்தஞ்சேரி காடு
ADDED : மே 03, 2024 11:50 PM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, சீத்தஞ்சேரி வெங்கல், மெய்யூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 1,498 ஏக்கர் பரப்பளவில் காப்புக் காடு உள்ளது. இங்கு செம்மரம் மற்றும் காட்டு மரங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு மான், குரங்கு உள்ளிட்ட விலங்கினங்கள் அதிகளவில் உள்ளன. செங்குன்றம் வன சரக கட்டுப்பாட்டில் இந்த காப்பு காடுகள் உள்ளன
கோடை துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெயிலின் உக்கிரம் அதிகளவில் உள்ளது. 105 டிகிரிக்கும் அதிகமான வெயில் காய்ந்து வருகிறது. விலங்குகள் தண்ணீரை தேடி கிராமங்களுக்கு செல்கின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், சீத்தஞ்சேரி காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ, ‛மளமள'வென பரவியது. இதனால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர் தீயை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
* திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையில் கோரமங்கலம் காலனி பகுதியில் சாலையோரம் நாகமரம் ஒன்று உள்ளது. தற்போது கொளுத்தும் வெயிலால் நாகமரத்தில் பாதி கிளைகள் உலர்ந்து உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாக மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மரத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து நாகமரத்தில் ஏற்பட்ட தீயை அனைத்தனர்.
தீ தடுக்க ஆலோசனை
அதிக வெப்பத்தால் ஏற்படும் தீ விபத்தை தடுக்க, கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாவட்டத்தில் வெடி விபத்து ஏதும் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரி மற்றும் பட்டாசு உற்பத்தி மையங்களை ஆய்வு மேற்கொள்ள, துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆவடி காவல் துணை கமிஷனர் ஜமீன் ஜமால், சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க துணை இயக்குனர் ஹேமலதா, சுகாதார இணை இயக்குனர் மீரா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.