குவாரிகள் நிறுத்தம், ஆந்திரா வரத்து குறைவால் சவுடு மண்... தட்டுப்பாடு!:கட்டுமானம், செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிப்பு
குவாரிகள் நிறுத்தம், ஆந்திரா வரத்து குறைவால் சவுடு மண்... தட்டுப்பாடு!:கட்டுமானம், செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிப்பு
UPDATED : ஜூலை 19, 2026 05:12 AM
ADDED : ஜூலை 18, 2026 08:13 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குவாரிகள் செயல்படாததால், மண் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவில் இருந்து சவுடு மண் வரத்தும் நின்றதால், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கட்டுமான தொழில் மற்றும் செங்கல் உற்பத்தியும் கடுமையாக பாதித்துள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 917 ஏரிகள் உள்ளன. இவற்றில் நிரம்பும் நீரை வைத்து, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
துார்ந்து கிடக்கும் ஏரிகளை அவ்வப்போது துார்வாருவதன் வாயிலாக, கூடுதல் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. மேலும், துார்வாரும் மண்ணை அப்புறப்படுத்த, தனியாருக்கு குவாரி உரிமம் வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக, அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைப்பதுடன், கட்டுமானம், செங்கல் மற்றும் மண்பாண்டம் உற்பத்திக்கும் பயன்படுகிறது.
மேலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலைகள், வீடுகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கும், சாலை மேம்பாட்டு பணிகளுக்கும், பெரும் பங்காற்றி வருகிறது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், மாவட்டம் முழுதும் 18க்கும் மேற்பட்ட வணிக குவாரிகளுக்கும், சாலை பணிக்காக 11க்கும் மேற்பட்ட ஏரிகளில் மண் எடுக்கவும், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அவற்றில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக மண் எடுக்கப்பட்டதால், த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்றதும், அனைத்து குவாரிகளும் மூடப்பட்டன.
மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் சவுடு மண் லாரிகளில், பல்வேறு விதிமீறல்கள் இருந்ததால், கனிமவள துறையின் சிறப்பு கண்காணிப்பு குழு, தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதனால், லாரிகளின் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, சவுடு மண் கிடைக்காமல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சாலை பணிகளும், தேக்கமடைந்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் புலம்புகின்றனர்.
செங்கல் தொழிற்சாலையை நம்பி 3 லட்சம் தொழிலாளர்கள் மாவட்டம் முழுதும் உள்ளனர். இதில், இரண்டு லட்சம் பேர் வடமாநிலத்தவர். செங்கல் தொழில் நடைபெறாவிட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு மண் குவாரிகள் தொடர்ந்து செயல்பட்டால் தான், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இது, கடந்த கால நடைமுறையில் இருந்து வந்தது.
தற்போது, குவாரிகள் இயங்காததால், வீடு கட்டும் தொழில், செங்கல் உற்பத்தி பாதிப்படைந்ததுடன், கட்டுமான செலவும் அதிகரித்துவிட்டது. தேவையான மண் கிடைக்காமல், திருவள்ளூர் மற்றும் சென்னை நகரின் அனைத்து வளர்ச்சி பணிகளும் தேக்கமடைந்துவிட்டன.
எனவே, கடந்த கால நடைமுறையை போல், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மண் குவாரிகள் செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கனிமவள துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய நடைமுறையில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சவுடு மண் குவாரிக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது, உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களை போல் அல்லாமல், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவு மண் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்பதில், உயரதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இந்த நடவடிக்கை முடிந்ததும், அரசு உத்தரவிட்டால் தான் வணிக பயன்பாட்டிற்கான குவாரி செயல்பட அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
