தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள்
தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள்
ADDED : ஜூன் 23, 2026 04:30 PM
கும்மிடிப்பூண்டி, ஜூன் 24–
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தை சுற்றி, தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்படும் மூன்று டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளும், 24 மணி நேரமும் இயங்குவதால், இரவு, பகல் என பாராமல், எப்போதும் தொழிலாளர்கள் நடமாட்டம் காணப்படும்.
தொழிற்சாலை வளாகத்தில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதான சாலைகளில், தனியாருக்கு சொந்தமான இடங்களில், மூன்று அரசு மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
தொழிலாளர்களை மட்டுமே குறிவைத்து, அந்த மூன்று மதுக்கடைகளும் இயங்குவதால், எப்போதும் அந்த கடைகளில் திருவிழா கூட்டம் போல் தொழிலாளர்கள் நிரப்பி வழிவதை காண முடியும்.
தொழிலாளர்கள் சாம்பாதிக்கும் பணத்தை, அரசு மதுக்கடைகளில் இழப்பது ஒரு புறம் இருக்க, பல தொழிலாளர்கள் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லும் ஆபத்தான நிலை தொடர்கிறது.
இதனால், வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளர்கள், உற்பத்தி பாதிப்பு போன்ற இக்கட்டான சூழல்நிலைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தள்ளப்படுகின்றனர்.
தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, மேற்கண்ட மூன்று டாஸ்மாக் மதுக்கடைகளையும் உடனடியாக மூட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
