/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
/
கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
ADDED : மே 09, 2024 01:24 AM

திருத்தணி முருகன் கோவிலில், நேற்று சித்திரை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு உற்சவர் முருக பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிருத்திகை விழா என்பதால் நேற்று வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
அதே போல், திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் மற்றும் அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
ஊத்துக்கோட்டை
சுருட்டப்பள்ளி ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.
அதேபோல், தொம்பரம்பேடு வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான், ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள நாகவல்லியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருக பெருமான் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆர்.கே.பேட்டை
ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவாமி மலைக்கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், மலைக்கோவிலில் உள்புறப்பாடு எழுந்தருளினார். அதேபோல், வேலுார் மாவட்டம், வள்ளிமலையிலும், நேற்று கிருத்திகை சிறப்பு உற்சவம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரிக்கல் குமரேசகிரி முருகன் கோவில், வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவில்களிலும் நேற்று சிறப்பு உற்சவம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரை பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில், நேற்று காலை பெண்கள் பால் குடம் எடுத்தனர். பாலமுருகனுக்கு சர்வ அபிேஷகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த முருகனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில், கோட்டக்கரை வீதிகள் வழியாக பாலமுருகன் உலா சென்று அருள் பாலித்தார்.
- நமது நிருபர் குழு -