/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூர்பேட்டையில் கம்பு விளைச்சல் அமோகம்
/
பொதட்டூர்பேட்டையில் கம்பு விளைச்சல் அமோகம்
ADDED : ஆக 16, 2024 11:15 PM

பொதட்டூர்பேட்டை : சிறுதானிய பயிர்களான கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவைகளை பயிரிடுவதில் விவசாயிகள் எப்போதும் ஆர்வமாக உள்ளனர். கோடையில் கேழ்வரகு அறுவடை நடத்தி முடித்துள்ள விவசாயிகள், தற்போது கம்பு அறுவடையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில், ஜங்காலிபள்ளி அருகே, 150 ஏக்கர் பரப்பளவில் கம்பு பயிரிடப்பட்டுள்ளது. தானிய தேவை மற்றும் விநாயகர் சதுர்த்திக்காக விவசாயிகள் இங்கு கம்பு பயிரிட்டு வருகின்றனர்.
ஆவணி சதுர்த்தி திதியில், விநாயகருக்கு கம்பு கதிர் படைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. ஒரு கம்பு கதிர் ஐந்து முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. கம்பு தானியமாக விற்பனை செய்தால், ஒரு கிலோ 18 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும்.
வரும் ஆவணி சதுர்த்தி திதிக்கு முன்னதாக கம்பு கதிர்களை அறுவடை செய்து, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, அரக்கோணம் சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

