/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைப்பு
/
திருத்தணி நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைப்பு
ADDED : மே 25, 2024 11:55 PM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் தினந்தோறும் சேரும் குப்பை மற்றும் கழிவுகள், நகராட்சி நிரந்தர ஊழியர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் என, 125 பேர், 20 வாகனங்களில் வார்டுகளில் சேகரிக்கின்றனர்.
இந்த குப்பைகளை பெரியார் நகர் கல்குவாரி அருகே நகராட்சி நிர்வாகம் பிரிப்பதற்கு பசுமை உரக்குடில் ஏற்படுத்தியுள்ளது.
இங்கு குப்பைகள் தரம் பிரித்து மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து, மக்கும் குப்பையில் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் மற்றும் மக்காத கழிவுகளை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பசுமை உரக்குடில் அருகே மக்காத குப்பை மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உரக்குடில் அருகே இருந்த குப்பைக்கு தீவைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் அதிலிருந்து எழுந்த கரும்புகையால் பெரியார் நகர் மற்றும் கல்குவாரி அருகே உள்ள குடியிருப்பு பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், திருத்தணி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போராடி வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில் திருத்தணி நகராட்சி ஆணையர் அருள், குப்பை கிடங்கில் தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரம் குப்பை எரிப்பு
சென்னை --திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் உள்ளது லட்சிவாக்கம் ஊராட்சி. மறு பகுதியில் உள்ளது பாலவாக்கம் ஊராட்சி. இரண்டு ஊராட்சிகளிலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து தினமும், ஒரு டன் அளவிற்கு குப்பை சேகரமாகிறது. துாய்மை பணியாளர்கள் வாயிலாக குப்பை எடுக்கப்படுகிறது. இந்த குப்பைகளை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்காமல், அங்குள்ள சாலையின் இரு புறமும் உள்ள ஏரிக்கரைகளில் கொட்டி எரியூட்டப்படுகிறது. இதனால் எழும் புகை சாலையை சூழ்ந்து விடுவதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலவாக்கம், லட்சிவாக்கம் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.