/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுகாதாரமின்றி செயல்படும் திருத்தணி அம்மா உணவகம்
/
சுகாதாரமின்றி செயல்படும் திருத்தணி அம்மா உணவகம்
ADDED : மே 31, 2024 02:37 AM

திருத்தணி:திருத்தணி ம.பொ.சி.சாலை, ரயில்வே நிலையம் எதிரே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை, 7:00 மணி முதல் காலை, 10:00 மணி வரையும், மதியம், 12:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரையும் உணவகம் திறந்து இட்லி, சாம்பார் சாதம், புளியோதரை மற்றும் தயிர்சாதம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு இட்லி 1 ரூபாயும், சாம்பார் மற்றும் புளியோதரை சாதம் 5 ரூபாயும், தயிர் சாதம், 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அம்மா உணவகத்திற்கு சென்று இட்லி, சாதம் சாப்பிடுகின்றனர்.
அதாவது காலையில், --400 இட்லி தயார் செய்து, ஒரு நபருக்கு அதிகபட்சமாக நான்கு இட்லிகள் வீதம் விற்பனை செய்கின்றனர். மதியம், 200 பேருக்கு சாம்பார், புளியோதரை மற்றும் தயிர் சாதம் தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.
அங்கேயே சாப்பிடுவதற்கு வசதியாக டேபிள், மின்விசிறி, சுத்திகரிக்கப்பட் குடிநீர் மற்றும் கை கழுவும் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இந்நிலையில் சில மாதங்களாக அம்மா உணவகத்தை முறையாக பராமரிக்காததால் தற்போது சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. குறிப்பாக, உணவு சாப்பிடும் அறையில் குடிநீர் இயந்திரம் பழுதானதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை. தண்ணீர் குடிப்பதற்கு டம்ளர் இல்லை, கைகழுவும் இடத்தில் சுகாதாரமின்றியும், குழாய்களும் உடைந்து, தரைதளமும் சேதம் அடைந்துள்ளன.
ஆறு மின்விசிறிகளில் மூன்று விசிறிகள் மட்டுமே உள்ளன. இதனால் அம்மா உணவகத்திற்கு வரும் பயனாளிகள் முகம் சுளிப்புடன் வேண்டா, வெறுப்பாக உணவு சாப்பிட்டு செல்கின்றனர்.
சிலர் சுகாதாரம் இல்லாததை கண்டு சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். எனவே கலெக்டர் அம்மா உணவகத்தை நேரில் பார்வையிட்டு சீரமைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.