/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் பஜாரில் 'சிசிடிவி' பொருத்தி கண்காணிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு
/
மீஞ்சூர் பஜாரில் 'சிசிடிவி' பொருத்தி கண்காணிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு
மீஞ்சூர் பஜாரில் 'சிசிடிவி' பொருத்தி கண்காணிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு
மீஞ்சூர் பஜாரில் 'சிசிடிவி' பொருத்தி கண்காணிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 30, 2024 10:02 PM
மீஞ்சூர்:பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில், மீஞ்சூர் பஜார் பகுதி அமைந்துள்ளது. சாலையின் இருபுறமும், மீஞ்சூர் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி, காவல் நிலையம் வரை, 1,000த்துக்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன.
மீஞ்சூரை சுற்றியுள்ள, 100க்கும் அதிகமான கிராமங்களின் முக்கிய வியாபார மையமாக இது இருக்கிறது. இதனால், நாள் முழுதும் மீஞ்சூர் பஜார் பகுதி பரபரப்பாகவே இருக்கும்.
அதே சமயம் பொதுமக்களின் பாதுகாப்பு இங்கு கேள்விக்குறியாகவே உள்ளது. வழிப்பறி, பெண்களிடம் தகராறு, 'குடி'மகன்களின் தொல்லை ஆகியவை உள்ளன. இரவு நேரங்களில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
மேலும், இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பிடிபடுவதில்லை. புறக்காவல் நிலையமும் சரிவர செயல்படுவதில்லை.
இப்பகுதியில், 'சிசிடிவி'க்கள் இருந்தால், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக பிடிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளும் காவல்துறை மேற்கொள்ளவில்லை.
கடந்த 28ம் தேதி காலை மீஞ்சூர் பஜார் பகுதியில் தலை, கைகள் வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, மூட்டையாக கட்டி வீசப்பட்டிருந்தார். கொலையாளிகளை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டது.
இப்பகுதியில், 'சிசிடிவி' கேமராக்கள் இருந்தால், கொலையாளிகளை எளிதாக அடையாளம் கண்டிருக்க முடியும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மீஞ்சூர் பஜார் பகுதி முழுதும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.