/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுக்கூடமாக மாறிய பயணியர் நிழற்குடை
/
மதுக்கூடமாக மாறிய பயணியர் நிழற்குடை
ADDED : ஜூலை 07, 2024 01:20 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பொன்னாங்குளத்தில், திருவாலங்காடு - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது.
இந்த நிழற்குடையை அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பேரம்பாக்கம், திருவள்ளூர் திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
காலை, 6:00 மணி முதல், இரவு, 8:30 மணி வரை, இந்த நிறுத்தத்தில் குறைந்தபட்சம், 20 பயணிகளாவது பேருந்துக்காக காத்திருப்பர்.
பயணியருக்காக அமைக்கப்பட்ட நிழற்குடையை, சில குடிமகன்கள் ஆக்கிரமித்து மது குடிக்கும் மையமாக மாற்றி உள்ளனர்.
பகல் நேரத்திலேயே சிலர், மது அருந்திவிட்டு, டம்ளர் வாட்டர் பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால், பயணியர் அங்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
குடிமகன்கள் அட்டகாசம்
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மீசரகாண்டாபுரம் கிராமத்தில், சோளிங்கர் செல்லும் பிரதான சாலையை ஒட்டி, வி.ஏ.ஓ., அலுவலகம், ரேஷன் கடை உள்ளது.
மகளிர் சுயஉதவி குழு கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம், ஊராட்சி நுாலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் என, கிராமத்தின் அனைத்து முக்கிய அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
இந்த வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கிடையாது. இந்நிலையில், மீசரகாண்டாபுரம் செல்லும் கான்கிரீட் சாலையை ஒட்டி அமைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில் மதுப்பிரியர்கள் இரவு நேரத்தில் மது அருந்துகின்றனர்.
இதனால், இந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு
மதுப்பிரியர்கள் காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வருபவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் இந்த வளாகத்தில், அத்துமீறி நுழைபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.