/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிக சுமையுடன் செல்லும் சாம்பல் லாரிகளால் அவதி
/
அதிக சுமையுடன் செல்லும் சாம்பல் லாரிகளால் அவதி
ADDED : மார் 04, 2025 12:55 AM

மீஞ்சூர்,
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல்மின் நிலையம் ஒன்று மற்றும் இரண்டில் உள்ள ஐந்து அலகுகளில், தினமும், 1.830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் உற்பத்தியின்போது வெளியேறும் சாம்பல் கழிவுகள், அங்கிருந்து இரும்பு உருளைகள் வாயிலாக, 8 கி.மீ., தொலைவில் உள்ள செப்பாக்கம் கிராமத்திற்கு கொண்டுசென்று குவிக்கப்படுகிறது. தண்ணீருடன் கலந்து வரும் சாம்பல் உலர்ந்த பின், அவை பல்வேறு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லப்படுகிறது.
இவை, டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக மலைபோல் குவித்து எடுத்துச் செல்லப்படுகிறது.
அரைகுறையாக தார்ப்பாய் போட்டு, மூடி எடுத்து செல்லும்போது, வேகத்தடைகள், பள்ளங்கள் இருக்கும் இடங்களில் லாரிகள் திடீர் 'பிரேக்' போட்டு செல்வதால், அவற்றில் உள்ள சாம்பல், சாலைகளில் கொட்டுகிறது.இதனால் அடுத்தடுத்து வாகனங்கள் செல்லும் போது, கடும் புழுதி ஏற்படுகிறது.
இதனால் அத்திப்பட்டு - வல்லுார், மீஞ்சூர் - பொன்னேரி செல்லும் சாலையில் பெரும் இடையூறு ஏற்படுகிறது. புழுதியில் சிக்கி மற்ற வாகனங்கள் தடுமாறுகின்றன.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கூடுதல் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
அதுமட்டுமின்றி, சாலையில் குவியும் சாம்பல் காற்றில் பறந்து, அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் கடைகளில் படிந்து, அங்குள்ளோருக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
அதிக சுமையுடன் சாம்பல் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.