/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி
/
டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி
டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி
டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி
ADDED : மே 31, 2024 02:46 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் வீரகநல்லுார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன், 47.
இவர் கே.ஜி.கண்டிகையில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார். தி.மு.க.,வில் ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் பதவி வகித்து வருகிறார்.
இவருக்கும், பகுதியில் அழகுநிலையம் வைத்து நடத்தி வரும் மோகனபிரியா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் குணசேகரன், மோகனபிரியாவுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கினார்.
இந்நிலையில், குணசேகரனுக்கும், மோகனபிரியாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால், பணத்தை திருப்பி தருமாறு குணசேகரன் கேட்டுள்ளார். அதற்கு மோகனபிரியா தவணை முறையில் பணத்தை தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, தாடூர் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் குருபிரகாஷ், 26 என்பவருக்கும், மோகனபிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர்.
இதனால், குருபிரகாஷுக்கும், குணசேகரனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு குணசேகரன் பயிற்சி பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை கே.ஜி.கண்டிகை பெட்ரோல் பங்க் அருகே, காரில் சென்ற குருபிரகாஷ், குணசேகரனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதினார்.
இதில் பலத்த காயமடைந்த குணசேகரனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து குருபிரகாஷை கைது செய்தனர்.