ADDED : ஜூலை 14, 2026 08:02 PM
சிப்காட் தொழிற்சாலையில் ‘பர்னஸ்’ வெடித்து... பீஹார் மாநில தொழிலாளி பலி; 9 பேர் ‘அட்மிட்’
கும்மிடிப்பூண்டி, ஜூலை 15–
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள உலோக உருக்காலையில், ‘பாய்லர்’ வெடித்து சிதறியதில், பீஹார் மாநில தொழிலாளி உயிரிழந்தார். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ‘சிப்காட்’ தொழில் பூங்காவில், ‘ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங்’ நிறுவனத்தின் உலோக உருக்கு தொழிற்சாலை உள்ளது. அங்கு, ஈயம், காப்பர் உள்ளிட்ட உலோக பொருட்கள் தரம் பிரித்து உருக்கி, மொத்த விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆலையில் நேற்று அதிகாலை, வட மாநிலங்களை சேர்ந்த, 10 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன், ‘பாய்லர்’ வெடித்து சிறியது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் கூரை உட்பட கிட்டத்தட்ட 40 மீட்டர் சுற்றளவிலான பகுதி முழுதும் நொறுங்கி சிதறியது.
இந்த விபத்தில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிரஞ்சன், 24, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் பணியாற்றிய அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பூசன்குமார், 25, ஓம்குமார், 22, ரஞ்சித்குமார், 35, ராஜாபப்பு, 26, ரன்வீர்குமார், 27, பிரின்ஸ்குமார், 27, அரவிந்த்குமார், 26, கமலேஷ், 40; மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிம்பர் சிங், 24, ஆகிய ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு, மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் திவ்யா தலைமையிலான குழுவும், தொழிற்சாலையில் கள ஆய்வு மேற்கொண்டார்.
உருக்காலை மூடல்
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் நேற்று சந்தித்து, ஆறுதல் கூறினார்.
பின், அவர் கூறியதாவது:
‘பாய்லர்’ வெடித்த விபத்தில் மொத்தம், 10 பேர் பாதிக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற ஒன்பது பேரில் இருவர் கீழ்பாக்கம் மருத்துவமனையிலும், மூவர் புழலில் வெங்கடேஸ்வரா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதமுள்ளவர்கள் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளனர். பாதுகாப்பு முறைகள் சரியாக பின்பற்றவில்லை என, விபத்து நடந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு, கடந்த மாதம், 11ம் தேதி, ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டது.
தற்போது, இந்த விபத்து நடந்துள்ளது. நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டு விட்டது. எதனால் விபத்து நடந்தது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வு முடிந்ததும், ‘சீல்’ வைப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பர்வேஸ் கூறினார்.
திருவள்ளூர் கன்னிகேபேர் கிராமத்தில், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு, 18 பேர் உயிரிழந்த கொடூரம் சமீபத்தில் நடந்தது. அந்த தொழிற்சாலைக்கு ‘சீல்’வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பூங்காவில் மற்றொரு ஆலையில், பாய்லர் வெடித்து விபரீதம் நடந்துள்ளது, தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை, அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்ய வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
