/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியகரும்பூர் ஏரிக்கரைகள் சேதம் மழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
/
பெரியகரும்பூர் ஏரிக்கரைகள் சேதம் மழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
பெரியகரும்பூர் ஏரிக்கரைகள் சேதம் மழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
பெரியகரும்பூர் ஏரிக்கரைகள் சேதம் மழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 21, 2024 06:51 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெரியகரும்பூர் கிராமத்தில், 360 ஏக்கர் பரப்பில், பாசன ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும், அகரம், சேகண்யம், பெரியகரும்பூர், தேவம்பட்டு, பனப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் மழைநீர், மேற்கண்ட கிராமங்களின் விவசாயத்திற்கு பயன்படுகிறது. தற்போது ஏரியின் கரைகள் முழுதும் சேதம் அடைந்து உள்ளன.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது, ஏரி முழுமையாக நிரம்பியது. கரைகள் பலவீனமாக இருந்ததால், மழைநீரில், மண் அரிப்பு ஏற்பட்டு, அவை சரிந்தன.
கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், 20 அடி அகலத்திற்கு கரைகள் பலப்படுத்தப்பட்டன. தற்போது அவை, ஐந்து அடியாக கரைந்து கிடக்கிறது.
சரிந்த கரைகள் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது அவ்வப்போது பெய்துவரும் மழைக்கு கரைகளில் மண் அரிப்பு அதிகரித்து வருகிறது. ஏரியை சுற்றிலும், 4கி.மீ., நீளத்திற்கு கரைகள் பலவீனமாக இருக்கிறது.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், கரைகள் பலவீனமாகி இருப்பது ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏரியின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறையிடம் விவசாயிகள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லலை.
விவசாய நிலங்கள் மூழ்கி பாழாவதையும், கிராமவாசிகள் உடமைகளை இழப்பதையும் வேடிக்கை பார்க்க பொதுப்பணித்துறை தயாராக இருப்பதாக விவசாயிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பெரியகரும்பூர் கிராம விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு மழையின்போதே ஏரியின் கரைகள் உடையும் நிலை இருந்தது. இந்த ஆண்டும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், கரை உடைப்பை தவிர்க்க முடியாது.
கரை உடைந்தால், சுற்றியுள்ள கிராமங்களில், 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி வீணாகும். மேலும், 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடியிருப்புகளையும் மழைநீர் சூழும் அபாயம் உள்ளது.
ஏரியில் சவுடுமண் அதிகளவில் இருக்கிறது. அதை கொண்டு கரைகள் அமைப்பதால் கரைந்து விடுகிறது. களிமண் கொண்டு பலப்படுத்த வேண்டும்.
உடைப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினரிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். நிதி இல்லை என கையை விரிக்கின்றனர்.
வடகிழக்கு பருவ மழைக்கு முன், கரைகளை பலப்படுத்த முன்வராவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.