/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாசன ஏரிக்கு விமோசனம் கிடைக்குமா? பனப்பாக்கம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பாசன ஏரிக்கு விமோசனம் கிடைக்குமா? பனப்பாக்கம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாசன ஏரிக்கு விமோசனம் கிடைக்குமா? பனப்பாக்கம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாசன ஏரிக்கு விமோசனம் கிடைக்குமா? பனப்பாக்கம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 28, 2024 05:47 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பில் பாசன ஏரி அமைந்து உள்ளது. இதில் தேங்கும் தண்ணீரை கொண்டு, 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பனப்பாக்கம் ஏரியின் அருகில், 300 ஏக்கர் பரப்பில் பெரியகரும்பூர் ஏரியும் அமைந்து உள்ளது. இந்த இரு ஏரிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில், 100 ஏக்கர் மேய்க்கால் நிலம் உள்ளது.
இந்த மேய்க்கால் நிலப்பகுதியான தாழ்வாக இருப்பதால், மழைக்காலங்களில் இதில் மழைநீரை தேக்கி வைத்து, பனப்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்காக, பனப்பாக்கம் - பெரியகரும்பூர் ஏரிகளுக்கும் இடையே, 400 மீ. நீளத்தில், 1 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர், உபரிநீரை வெளியேற்றுவதற்காக இரண்டு ஷட்டர்கள் அமைக்கப்பட்டன.
மேய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்தவர்களால் மேற்கண்ட தடுப்பணை உடைக்கப்பட்டும், ஷட்டர்கள் சேதம் அடைந்தும் உள்ளன. இதனால், ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் உள்ளது.
மேற்கண்ட மேய்க்கால் நிலப்பகுதியிலும் தேங்கும் மழைநீர், தடுப்பு சுவர் உடைப்புகள் வழியாக வெளியேறி பழவேற்காடு கடலில் கலந்து வீணாகிறது.
இரு ஏரிகளுக்கும் இடையே உள்ள தடுப்பு சுவரை சீரமைத்தால், பனப்பாக்கம் ஏரிக்கு எளிதாக நீர்வரத்து இருக்கும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதில் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும் நிலையில், ஆழப்படுத்தப்படுவதில்லை. தற்போது ஏரியின் கலங்கல் பகுதியும், உள்பகுதியும் ஒரே நிலையில் சமமாக இருக்கிறது.
கடந்த, 15ஆண்டுகளாக இதே நிலை தொடர்வதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இந்த ஆண்டாவது பனப்பாக்கம் ஏரிக்கு விமோசனம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.