/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு - பொன்னேரி அதிகாலை பஸ் இயக்கப்படுமா?
/
பழவேற்காடு - பொன்னேரி அதிகாலை பஸ் இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 27, 2024 12:29 AM
பழவேற்காடு:பழவேற்காடு பகுதியை சுற்றிலும், 40க்கும் அதிகமான மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள், பகல் நேரங்களில் குறித்த நேரத்திற்கு வந்து செல்வதில்லை என்ற புகார் தொடரும் நிலையில், தற்போது அதிகாலை நேரங்களில் பேருந்து சேவை குறைவால், மீனவ மக்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர்.
அதிகாலை 4:00 மணிக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின், தடம் எண்: 558 என்ற பேருந்து இயக்கப்படுகிறது. அதன்பின், 6:00 மணிக்கு மேல் தான் மற்ற பேருந்துகள் இயக்கம் உள்ளது.
காலை 5:45 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று மட்டும் இயக்கப்படுகிறது. இதில், பயணியர் கடும் நெரிசலுடன் பயணிக்கின்றனர்.
இதுகுறித்து பயணியர் கூறியதாவது:
தனியார் பேருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு அரசு பேருந்துகள் பழவேற்காடில், காலை 5:00 மணிக்கு வந்து நிற்கின்றன. ஆனால், தனியார் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்து தான் இவை பொன்னேரிக்கு புறப்படுகின்றன.
அரசு பேருந்துகள் இருந்தும், தனியார் பேருந்திற்கு முன்னுரிமை அளிப்பது ஏன் என தெரியவில்லை. பல்வேறு பணிகள் காரணமாக பயணியர் வேறு வழியின்றி தனியார் பேருந்தில் கடும் நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
பொன்னேரி பணிமனையில் இருந்து, பழவேற்காடுக்கு கடைசி டிரிப்பாக வரும், தடம் எண்: டி.28 இரவு தங்கி, அதிகாலையில் பொன்னேரிக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த பேருந்து இரவு தங்காமல் பணிமனைக்கு திரும்பி விடுகிறது.
எனவே, அதிகாலை 4:00 - 6:00 மணிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.