தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கே.ஜி.கண்டிகையில் தெரு நாய் கடித்து ஒரே நாளில்.. 10 பேர் பாதிப்பு . கட்டுப்படுத்துவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

 கே.ஜி.கண்டிகையில் தெரு நாய் கடித்து ஒரே நாளில்.. 10 பேர் பாதிப்பு . கட்டுப்படுத்துவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

 கே.ஜி.கண்டிகையில் தெரு நாய் கடித்து ஒரே நாளில்.. 10 பேர் பாதிப்பு . கட்டுப்படுத்துவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்


ADDED : மார் 01, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி, திருத்தணி ஒன்றியத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால், நேற்று ஒரே நாளில் கே.ஜி.கண்டிகையில் மட்டும் 10 பேரை நாய் கடித்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன.

குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தும் போது, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். பெரும்பாலான ஊராட்சிகளில் பகல் நேரத்திலேயே மக்கள் நடந்து செல்ல முடியவில்லை.

ஆனால், நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டி வருகிறது.

இந்நிலையில், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பஜார் தெருவில், நேற்று காலை நடந்து சென்ற நரேஷ், 40, மாதவன், 50, விமலா, 55, சாந்தி, 45, அன்பழகன், 50, உட்பட 10 பேரை தெரு நாய் துரத்தி துரத்தி கடித்தது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மருத்துவர்கள், நாய்கடிக்கு முதலுதவி மற்றும் தடுப்பூசிகள் போட்டு அனுப்பி வைத்தனர்.

இதில், மூன்று பேருக்கு பாதிப்பு அதிகளவில் இருந்ததால் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் நக்கீரன் கூறியதாவது:

ஊராட்சிகளில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு, கால்நடை துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஒன்றிணைந்து, நாளை முதல் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நாய்களை பிடிப்பதற்கு தேவையான கருவிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். கே.ஜி.கண்டிகையில் இன்று நடந்த சம்பவம் போல், வேறு எந்த ஊராட்சியிலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளூரில் 'ரேபிஸ்' தடுப்பூசி பணி திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில், 3,562 தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் இதுவரை 1,034 நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள தெரு நாய்களுக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெருவில் சுற்றித்திரியும் நாய்களை அங்கேயே பிடித்து, அவற்றிற்கு 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தும் பணி, இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை, 40 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். - தாமோதரன், நகராட்சி கமிஷனர், திருவள்ளூர்.



புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை கே.ஜி.கண்டிகை கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட தெருக்களில், 1,000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதுதவிர, இங்குள்ள பஜாரில், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் 'பாஸ்ட் புட்' கடைகள் அதிகளவில் உள்ளன. இதனால், நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று காலை குமரன் தெருவில் இருந்து பஜாருக்கு நடந்து சென்றேன். அப்போது, தெரு நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்தது. மேலும், பின்னால் வந்த நான்கு பெண்களையும் கடித்தது. தெரு நாய்களை பிடிக்குமாறு பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் அலட்சியத்தால், நேற்று ஒரே நாளில், 10 பேரை நாய் கடித்துள்ளது. - ஆர்.மாதவன், கே.ஜி.கண்டிகை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us