/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1,460 கன அடி தண்ணீர் கண்டலேறுவில் திறப்பு
/
1,460 கன அடி தண்ணீர் கண்டலேறுவில் திறப்பு
ADDED : அக் 30, 2024 12:44 AM

ஊத்துக்கோட்டை:கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 1,460 கன அடி நீர் திறப்பதால், தமிழக எல்லையில் 365 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்களான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை, வீராணம் ஆகியவற்றில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்தது. இதனால் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி, தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த மாதம் 19 முதல் வந்து கொண்டு இருந்தது.
வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால், நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் கண்டலேறுவில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், குறைக்கப்பட்டது. தற்போது மழை நின்ற நிலையில், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
கடந்த, 23ம் தேதி முதல் வினாடிக்கு 140 கன அடியில் இருந்து படிப்படிப்படியாக அதிகரித்து தற்போது, 1,460 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டிற்கு வினாடிக்கு, 365.24 கன அடிநீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி நிலவரம்:
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 330 கன அடி, மழைநீர் 150 கன அடி சேர்ந்து மொத்தம், 480 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
இங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு 350 கன அடி நீர் திறக்கப்பட்டு, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.