/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திட்டமில்லாமல் கட்டிய 20 பேருந்து நிறுத்தங்கள்...அகற்றம்!:சாலை விரிவாக்க பணியால் ரூ.1.50 கோடி விரயம்
/
திட்டமில்லாமல் கட்டிய 20 பேருந்து நிறுத்தங்கள்...அகற்றம்!:சாலை விரிவாக்க பணியால் ரூ.1.50 கோடி விரயம்
திட்டமில்லாமல் கட்டிய 20 பேருந்து நிறுத்தங்கள்...அகற்றம்!:சாலை விரிவாக்க பணியால் ரூ.1.50 கோடி விரயம்
திட்டமில்லாமல் கட்டிய 20 பேருந்து நிறுத்தங்கள்...அகற்றம்!:சாலை விரிவாக்க பணியால் ரூ.1.50 கோடி விரயம்
ADDED : நவ 15, 2024 01:44 AM

திருவள்ளூர்:திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்த உள்ள நிலையில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் திருத்தணி வரை அமைக்கப்பட்ட 20 பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட உள்ளன. சரியான திட்டமிடலின்றி மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால், அரசு பணம் விரயமானதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை-- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருநின்றவூர் -- ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., துாரம் ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி, 2011ல் 571 கோடி ரூபாய் நிதியில் துவங்கியது.
ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரை, நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்துார் வரை, இருவழிச் சாலையாக மட்டும் மாற்றப்பட்டது.
திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை பணி கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், இப்பணியும் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும், திருவள்ளூர்-திருத்தணி வரை நான்கு வழி சாலை அமைக்க, சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை துறை நிலம் கையப்படுத்தி, எல்லை கற்கள் நடப்பட்டன.
நெடுஞ்சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், இச்சாலை அமையவுள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தினாலும், கிராமவாசிகள் தங்கள் வீடுகளை அகற்றாமல் வசித்து வந்தனர். இதனால் சாலை அகலப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதற்கிடையே, திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை, தேசிய நெடுஞ்சாலைக்கு எடுக்கப்பட்டு அளவீடு செய்யப்பட்ட இடங்களில், 20 பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட மற்றும் ஒன்றிய பொது நிதியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிறுத்தங்களை கட்டி உள்ளனர்.
அதுவும், கடந்த, 2021-22 மற்றும் 2023-24 நிதி ஆண்டுகளில் தான் இந்த பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிறுத்தங்கள் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட வரம்பிற்குள் தான் அமைந்துள்ளன. தற்போது, திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக, 985 கோடி ரூபாய் நிதியில் பணிகள் துவங்கி உள்ளது. இதனால், தமிழக அரசு நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அனைத்தும் அகற்றப்படும் சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வர்கள் கூறியதாவது:
திருவள்ளூர்-திருத்தணி வரை தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்த சாலை கையகப்படுத்தப்பட்டு எல்லை கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு நிதியில் இந்த இடத்தில் பேருந்து நிறுத்தங்கள் கட்டி உள்ளனர். இதற்கு, ஒன்றிய பொறியாளர்களும் அனுமதி அளித்து, தற்போது பேருந்து நிறுத்தங்கள் பயன்பாட்டில் உள்ளன.
நிதி ஒதுக்கீடு செய்த போதே, தேசிய நெடுஞ்சாலை எல்லை கற்கள் பதிக்கப்பட்ட பகுதி அருகில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தால், அரசு பணம் விரயமாகி இருக்காது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியம், சரியான திட்டமிடல் இல்லாததால், தற்போது அரசு பணம் 1.50 கோடி வரை விரயமாகி விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.