20 ஆய்வாளர் பணியிடம் காலி ஆவடியில் சுகாதாரம் கேள்விக்குறி
20 ஆய்வாளர் பணியிடம் காலி ஆவடியில் சுகாதாரம் கேள்விக்குறி
ADDED : ஏப் 01, 2025 12:37 AM

ஆவடி, ஏப். 1-
ஆவடி மாநகராட்சியின், 48 வார்டுகளில், தினமும் 1.80 லட்சம் கிலோ, அதாவது 180 டன் குப்பை உருவாகிறது. அவற்றை தினமும் அப்புறப்படுத்துவது, மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
ஒவ்வொரு மாதமும் நடக்கும் கவுன்சில் கூட்டத்திலும், குப்பை சரியாக அகற்றுவதில்லை என, கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனாலும், பிரச்னை தீர்ந்தபாடில்லை. குப்பை அகற்றும் ஒப்பந்த ஊழியர்களை, சுகாதார ஆய்வாளர்கள் தினமும் கண்காணித்து, முறைப்படுத்த வேண்டும். இங்கு அனுமதிக்கப்பட்ட, 20 சுகாதார ஆய்வாளர் இடங்களும் காலியாக உள்ளன.
மேலும், 12 மேற்பார்வையாளர் இடத்தில், ஐந்து பேர்; நான்கு சுகாதார அலுவலர் இடத்தில், இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
ஒன்றரை ஆண்டாக இந்த பணியிடங்கள் காலியாக உள்ளதால், சுகாதார பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது, ஐந்து ஒப்பந்த அலுவலர்களை வைத்து, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நிரந்தர ஆய்வாளர்கள் இல்லாததால், வணிக நிறுவன உரிமம் வழங்குவது, பிளாஸ்டிக் சோதனை, குப்பை அகற்றுதல் கண்காணிப்பு, தரம் பிரிப்பு, திருமண மண்டபங்கள் ஆய்வு, விதிமீறுதலுக்கு நோட்டீஸ், அபராதம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் கேள்விக்குறியாகி உள்ளன. பிறப்பு, இறப்பை பதிவு செய்து சான்றிதழ் வழங்குவதும் தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து, பட்டாபிராமை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெ.ஜெயகுமார் கூறியதாவது:
சுகாதார ஆய்வாளர்கள் இல்லாததால், துாய்மை பணி சரியாக நடக்கவில்லை. குப்பை அகற்றும் ஒப்பந்த பணியாளர்களையும் கண்காணிக்க முடியவில்லை.
இதனால், வருகை பதிவேட்டில் முறைகேடு நடந்து, ஊழலுக்கு வழிவகுக்கும் நிலை உள்ளது. உட்புற தெருக்களில் வாரம் இருமுறை தான் குப்பை சேகரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுதும், உள்ளாட்சியில் சுகாதார துறை பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களை நிரப்ப, 190 ஊழியர்களை அரசு தேர்வு செய்துள்ளது. விரைவில், அவர்கள் பணியில் அமர்த்தப்படுவர். ஆவடியில், 15 ஊழியர்களையாவது நியமித்தால் தான், பிரச்னையை சமாளிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசியல் தலையீடு?
அரசியல் தலையீடு அதிகம் இருப்பதால், பெரும்பாலான அதிகாரிகள், ஊழியர்கள் இந்த மாநகராட்சியில் பணியாற்ற விரும்புவதில்லை.
புதிதாக வருவோரும், ஓரிரு மாதங்களில் மன உளைச்சலில் சிக்கி, வேறு இடங்களுக்கு மாறி விடுகின்றனர்.
இதன் காரணமாக, ஆவடி மாநகரம் வளர்ச்சி அடையாமல் உள்ளதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
