/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
"வேகமும் விவேகமும் மாணவர்களுக்கு தேவை'
/
"வேகமும் விவேகமும் மாணவர்களுக்கு தேவை'
ADDED : ஜூலை 11, 2011 11:35 PM
திருத்தணி : வேகமும் விவேகமும் இருந்தால், மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய முடியும் என, பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஜெயா பொறியியல் கல்லூரி தலைவர் கனகராஜ் கூறினார்.
திருத்தணி அடுத்த, காஞ்சிப்பாடியில் எல்.சி.ஆர். பொறியியல் கல்லூரி, ஜெயா கல்வி குழும கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு, கல்லூரி நிறுவனர் கனகராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்றார். கல்லூரி டீன் ராஜிவ் கல்லூரியின் சிறப்பு அம்சங்களை விளக்கினார்.
இதில், சிறப்பு விருந்தினராக எச்.சி.எல்.டெக்னாலஜி உதவித் தலைவர் ஸ்ரீஹரி கலந்து கொண்டு, பொறியியல் முடித்த 160 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில், ஜெயா கல்வி குழுமத்தின் தாளாளரும், நிறுவனருமான கனகராஜ் பேசுகையில், 'ஆண்டுதோறும் இந்தியாவில், 12 லட்சம் மாணவ, மாணவியர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றனர். 2020ம் ஆண்டுக்குள், உலகிலேயே இந்தியா சிறந்த நாடாக மாறும். பொறியியல் படித்த மாணவர்கள் சிலர் தங்களுக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என, கூறுகின்றனர்.
சுயமாக சொந்த தொழில் துவங்க மாணவர்கள் தயங்குகின்றனர். எந்த தொழிலையும் ஆர்வத்துடன் செய்தால் கண்டிப்பாக உயர்ந்த நிலையை அடைய முடியும். பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் நாடு முன்னேற்றமடையும். அவர்களும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். மாணவர்கள் தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது. மாணவர்களுக்கு வேகமும், விவேகமும் இருந்தால் அவர்கள் உயர்ந்த பதவியை அடைய முடியும்' என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் விஜயகுமாரி, துணைத் தாளாளர் நவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் சசிகலாதேவி நன்றி கூறினார்.