/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் பகுதிக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர்
/
மீஞ்சூர் பகுதிக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர்
ADDED : பிப் 22, 2024 01:16 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் மற்றும் சுற்றியுள்ள அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், வல்லுார், மேலுார் உள்ளிட்ட பகுதிகளில், நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
கேன் தண்ணீர்
மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் டிராக்டர்களில் கொண்டு வரப்படுபவை மற்றும் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
மேற்கண்ட பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று, சட்டசபை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில், பொன்னேரி காங்., -- எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், மீஞ்சூர், அத்திப்பட்டு பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னை தொடர்பாக நிரந்த தீர்வு ஏற்படுத்துவதற்கான விரிவான திட்டம் அரசிடம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, 'மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, தினமும், 4 கோடி லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிலிருந்து, தினமும், 40லட்சம் லிட்டர் குடிநீர் மேற்கண்ட பகுதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்தில் இருந்தும், புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது' என தெரிவித்தார்.
வெளிவட்ட சாலை
இது குறித்து சமூக ஆர்வலர் சிலர் தெரிவித்ததாவது:
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக மீஞ்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முன்வந்து உள்ளது வரவேற்கத்தக்கது.
அது போதுமானதாக இருக்காது. புழல் ஏரியில் இருந்தும் குடிநீர் கொண்டு வருவதற்கான திட்டமிடலும் வேண்டும்.
தற்போது அமைந்துள்ள மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையை ஒட்டி கொண்டு வந்தால், குறைந்த செலவில் திட்டத்தை செயல்படுத்தி, மீஞ்சூர் பகுதிவாழ் மக்களுக்கு குடிநீர் பிரச்னையில் இருந்து நிரந்தர தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.