ADDED : செப் 23, 2026 08:14 PM
மப்பேடு: மப்பேடு பகுதியில், தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட, இரு தரப்பை சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சி, விஸ்வநாதகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 42. இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சகோதரர் சற்குணம், 40. இருவருக்கும், சொத்து பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சற்குணம் வீட்டு கழிவுநீர், சந்தோஷ்குமார் வீடு வழியாக சென்றது. இதனால், சந்தோஷ்குமாரின் மனைவி ராதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனால் ஏற்பட்ட தகராறில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதன்பின் இருதரப்பினரும், மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, சற்குணம், அவரது மனைவி காவ்யா, 37, மாமியார் லலிதா, 70, சந்தோஷ்குமார், அவரது மனைவி ராதா ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
