ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை பட்டப்பகலில் 5 பேர் கும்பல் வெறிச்செயல்
ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை பட்டப்பகலில் 5 பேர் கும்பல் வெறிச்செயல்
ADDED : ஆக 25, 2026 07:44 PM
ஊத்துக்கோட்டை, ஆக. 26–
காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு பைக்கில் சென்ற ரவுடியை, 5 பேர் கொண்ட கும்பல், பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டிச் சென்று, சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது சிட்ரத்துார் கிராமம். இங்கு வசித்து வந்தவர் மாரிமுத்து என்கிற ரூபன், 33.
கடந்த மாதம், கீழானுார் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பழனி என்பவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாரிமுத்து, நிபந்ததை ஜாமினின் வெளியே வந்தார்.
ஒவ்வொரு நாளும், வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், நேற்று காலை தனது பைக்கில், நண்பர் வெங்கடேசனுடன் மாரிமுத்து வெங்கல் காவல் நிலையம் சென்றார்.
அங்கு கையெழுத்திட்டுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டு இருந்தபோது, பாகல்மேடு அருகே காரில் வந்த, 5 பேர் கொண்ட கும்பல், மாரிமுத்து பைக் மீது மோதியது.
இதில் மாரிமுத்து, வெங்கடேசன் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். காரில் இருந்து, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பலை பார்த்து, மாரிமுத்து தப்பி ஓடினார்.
அவரை பின்தொடர்ந்த கும்பல், மாரிமுத்துவை சுற்றி வளைத்து, சரமாரியாக தாக்கினர். இதில், மாரிமுத்துவின் கை மணிக்கட்டு பகுதி துண்டானது. தலை, முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அப்போது, ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்கு பாகல்மேடு சென்ற வெங்கல் போலீசார், மாரிமுத்துவை கொலை செய்துவிட்டு தப்பிய கும்பலை துரத்தினர். தகவலறிந்த வந்த தனிப்பிரிவு போலீசார்ரும், கொலை குற்றவாளிகளை துரத்தினர்.
வயல்வெளிகளில் ஓடி தப்ப முயன்ற, கீழானுார் கிராமத்தைச் சேர்ந்த தீனா, 23, நரேஷ், 25, விக்கி, 23, ஆகியோரை பிடித்து கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, பேரரசு, 23, ராஜ்குமார், 21, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:
மாரித்துவிற்கும், தீனாவின் தங்கை தீபாவிற்கு தொடர்பு இருந்துள்ளது. இதை தீனா, பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பான பிரச்னையில், கடந்தாண்டு தீபா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கையின் இறப்பிற்கு மாரிமுத்து தான் காரணம் என நினைத்த தீனா, தங்கையின் மரணத்திற்கு பழி தீர்க்க நினைத்துள்ளார்.
அதன்படி, நண்பர்களை உதவிக்கு அழைத்து திட்டம் தீட்டிய தீனா, நேற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு வரும் வழியில் மாரிமுத்துவை கொலை செய்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
