பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை கைகொடுக்கும் ஆலமரம்
பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை கைகொடுக்கும் ஆலமரம்
ADDED : ஜன 30, 2026 07:09 AM

ஆர்.கே.பேட்டை: கூட்டு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை தவிர்த்து தொலைவில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையால் அதிருப்தியில் உள்ள பயணியருக்கு, அங்குள்ள ஆலமரம் நிழற்குடையாக பயனளித்து வருகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலத்திற்கு, திருத்தணியில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக அரசு பேருந்து தடம் எண்: டி65, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து வாயிலாக, வீரமங்கலம், தாமனேரி, பாலாபுரம், ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பயணியர் திருத்தணி மற்றும் சோளிங்கருக்கு பயணிக்கின்றனர்.
இந்த மார்க்கத்தில் தாமனேரி, வீரமங்கலம், ஸ்ரீகாளிகாபுரம் கூட்டு சாலையில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. ஆனால், இங்குள்ள நிழற்குடை, பேருந்து நிறுத்தத்தை விட்டு, 60 மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது.
இதனால், பயணியர் இந்த நிழற்குடையை தவிர்த்து, கூட்டு சாலையில் காத்திருந்து பயணம் மேற்கொள்கின்றனர். முச்சந்தியில் தவிக்கும் பயணியருக்கு இங்குள்ள ஆலமரம், நிழற்குடையாக பயனளித்து வருகிறது.
வெயில் நேரத்தில் இந்த ஆலமரம் பயணிகளுக்கு பயனளித்தாலும், மழைக்காலத்தில் போதுமானதாக இல்லை. இதனால், ஆலமரத்தை ஒட்டி, அதே பகுதியில் அடிப்படை வசதிகளுடன் நிழற்குடை கட்டப்பட வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
