/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலையில் தினமும் ஒரு திருக்குறள்
/
தொழிற்சாலையில் தினமும் ஒரு திருக்குறள்
ADDED : ஏப் 29, 2025 11:34 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில், தினமும் ஒரு திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என, தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் ஜெயகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் 1950 விதியின்படி, அனைத்து தொழிற்சாலைகளிலும் தமிழில் பெயர் பலகை கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும். இந்த பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், தெளிவாக தெரியும்படியும் வைக்கப்பட வேண்டும். அதன்பின், ஆங்கிலம் மற்றும் அவரவர் விரும்பும் மொழிகளில் வைத்துக் கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டரை தலைவராக கொண்டு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவினர் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, கடந்த 15ம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின், தமிழில் பெயர்பலகை வைக்காத தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் அறிவிப்பு பலகையில் தினமும் ஒரு திருக்குறளை, அதற்குண்டான பொருள் விளக்கத்துடன் எழுதி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

