பயன்பாடின்றி பாழடைந்து வரும் மகளிர் சுய உதவி குழு கட்டடம்
பயன்பாடின்றி பாழடைந்து வரும் மகளிர் சுய உதவி குழு கட்டடம்
UPDATED : நவ 27, 2026 04:21 PM
ADDED : நவ 27, 2026 04:16 PM

ஆர்.கே.பேட்டை: மகளிர் சுய உதவிக்குழுவினரின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டடம், பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்து வருகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரகோவில் மோட்டூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் எதிரே, மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுவினரின் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்காக கட்டப்பட்ட இந்தக் கட்டடம், சில ஆண்டுகளாக பயன்பாடின்றி கைவிடப்பட்டுள்ளது.
இதனால், கட்டடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால், கட்டடமும் படிப்படியாக பாழடைந்து வருகிறது.
மேலும், கட்டடத்தை சுற்றிலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
எனவே, மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
