ADDED : ஜன 02, 2024 07:05 AM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் கிராமத்தின் நடுவே அரசு தொடக்கபள்ளி, உயர்நிலை மற்றும் அங்கன்வாடி மையம் என ஒருங்கிணைந்த வளாகம் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தின் நடுவே பொது குளம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த குளம் சீராக பராமரிக்கப்பட்டு வந்தது.
அதன் பின், குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டதும், குளத்தின் பராமரிப்பு கேள்விக்குறியாக மாறியது.
முறையாக பராமரிக்கப்படாததால், குளத்தின் நீர்வரத்து நின்று போனது. குளத்தில், செடி, கொடிகள் வளர துவங்கின. புதர் மண்டிய குளத்தில் தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், குளம் விரைவில், துார்ந்து போகம் நிலை ஏற்பட்டுள்ளது.
துார்ந்து வரும் குளத்தின் சுற்றுச்சுவரும் இடிந்து கிடக்கிறது. இதனால், குளத்தில் இருந்து விஷ பூச்சிகள் வெளியேறும் நிலை உள்ளது. இதனால், மாணவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும், கிராமத்தின் நீர்நிலை அழிந்து வருவதால், பகுதிவாசிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பகுதிவாசிகளின் நலன் கருதி, குளத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

