ADDED : பிப் 01, 2026 06:59 AM

ஆர்.கே.பேட்டை: விவசாயிகளின் வசதிக்காக, சமீபத்தில் கட்டப்பட்ட நெற்களம் குடிமகன்களின் அட்டகாசத்தால் நாசமாகி உள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெள்ளாத்துார் ஊராட்சிக்கு உட்பட்டது கிருஷ்ணாகுப்பம் மேடு. கிருஷ்ணாகுப்பத்தில் இருந்து வங்கனுார் செல்லும் சாலையில், உணவுபொருள் பாதுகாப்பு கிடங்கு அருகே, சமீபத்தில் நெற்களம் கட்டப்பட்டது.
9.2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த நெற்களம் தற்போது குடிமகன்களால் நாசம் செய்யப்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில் இந்த நெற்களத்தில் அமர்ந்து மது அருந்துபவர்கள், காலி மதுபாட்டில்களை உடைத்து அங்கேயே வீசுகின்றனர். இவர்கள் விட்டு செல்லும் பிளாஸ்டிக் குப்பையால், நெற்களத்தை சுற்றிலும் சீர்கேடு நிலவுகிறது.
கண்ணாடி துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பையால் அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள், இந்த நெற்களத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நெற்களத்தில் மின்விளக்கு அமைக்கவும், இங்கு மது அருந்துபவர்களை கட்டுப்படுத்தவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
