தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெல் விற்பனை செய்ய இடைத்தரகரை அணுகும் விவசாயிக்கு 2 ஆண்டு தடை!: கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

நெல் விற்பனை செய்ய இடைத்தரகரை அணுகும் விவசாயிக்கு 2 ஆண்டு தடை!: கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

நெல் விற்பனை செய்ய இடைத்தரகரை அணுகும் விவசாயிக்கு 2 ஆண்டு தடை!: கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு


UPDATED : செப் 20, 2026 05:54 PM

ADDED : செப் 20, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2026 05:54 PM ADDED : செப் 20, 2026 05:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பணியாளர்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்:

“நெல் விற்பனை செய்ய இடைத்தரகரை அணுகும் விவசாயிகளுக்கு, இரண்டு ஆண்டுகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என, திருவள்ளூர் கலெக்டர் கவிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 70,425 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், 1.71 டன் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, 90,000 டன் நெல் வரவு எதிர்பார்க்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள, 14 வட்டாரங்களிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வாயிலாக, இரண்டு கட்டங்களாக, 70 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

அரசுக்குச் சொந்தமான கட்டடங்களைப் பயன்படுத்தி, தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், நெல் வியாபாரிகளிடம் பணியாளர்களும், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகளும் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து, விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து, கலெக்டர் கவிதா கூறியதாவது:

சொர்ணவாரி பருவத்தில், இதுவரை, 39,520 ஏக்கர் பரப்பளவு நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள, 30,905 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர், அறுவடைக்கு தயாராக உள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், குவிண்டால் ஒன்றுக்கு, சன்ன ரகம் 2,750 ரூபாய்க்கும், பொது ரகம் 2,600 ரூபாய்க்கும் விவசாயிகள் விற்பனை செய்யலாம்.

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகளையும் கண்காணிக்க, சப் - கலெக்டர், கோட்டாட்சியர் தலைமையில், வருவாய் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும், எந்த ஒரு விவசாயியும், தன்னுடைய அடங்கல் சான்றிதழை, இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகளிடம் வழங்கினால், அந்த விவசாயிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய அனுமதி மறுப்பதுடன், அரசு வழங்கும் எந்தவொரு மானியத் திட்டங்களும் வழங்கப்பட மாட்டாது.

நெல் கொள்முதல் நிலையங்களில் இடையூறு ஏற்படுத்தும் இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை தவிர, கூடுதலாக கட்டணத்தை வசூலிக்கும், சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முறைகேடு குறித்து புகார் அளிக்கலாம்

நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை, விவசாயிகள் அளிக்க வசதியாக, தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மண்டல மேலாளர் - 94446-62984, துணை மண்டல மேலாளர் - 95142 65373, துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) - 96262 82345, துணை மேலாளர் (கணக்கு-) - 9952779614 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 5993540 ஆகிய தொடர்பு எண்களில், நெல் கொள்முதலில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us