அடைக்கப்பட்ட இணைப்பு சாலை நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
அடைக்கப்பட்ட இணைப்பு சாலை நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
UPDATED : நவ 24, 2026 04:32 PM
ADDED : நவ 24, 2026 04:32 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே இணைப்பு சாலை அடைக்கப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் கடக்கும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.
சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் பஜார் பகுதியில் இருந்து மகாலிங்க நகர் வரையிலான இணைப்பு சாலை பணி, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
அதனால், இணைப்பு சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்றதால், விபத்துகள் அதிகரித்தன. அதற்கு தீர்வு காணும் விதமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.
அந்த இணைப்பு சாலையில், சில மாதங்களாக போக்குவரத்துக்கு தடை விதிக்கும் விதமாக, சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், எதிர் திசையில் வாகனங்கள் கடப்பதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
இணைப்பு சாலையை ஒட்டியபடி வீடுகள் இருப்பதால், விபத்து அச்சத்தில் அப்பகுதி மக்களே சாலையை மூடியதாக கூறப்படுகிறது.
குடியிருப்பு மக்கள் மற்றும வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் ஆரம்பாக்கம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
