/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அமோனியா கசிவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கைக்கு- பசுமை தீர்ப்பாயம் உறுதி
/
அமோனியா கசிவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கைக்கு- பசுமை தீர்ப்பாயம் உறுதி
அமோனியா கசிவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கைக்கு- பசுமை தீர்ப்பாயம் உறுதி
அமோனியா கசிவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கைக்கு- பசுமை தீர்ப்பாயம் உறுதி
ADDED : ஜன 02, 2024 09:29 PM
சென்னை:'சென்னை, எண்ணுாரில் உள்ள கோரமண்டல் உர தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவுக்கு காரணமானோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உறுதி அளித்துள்ளது.
சென்னை, எண்ணுார், பெரியகுப்பத்தில் உள்ள கோரமண்டல் உர ஆலையில் இருந்து, கடந்த டிசம்பர் 26ம் தேதி நள்ளிரவு 11.45 மணியளவில், திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் வசித்து வந்தவர்கள், வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. பலருக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன. 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது.
இந்த வழக்கு, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:அமோனியா வாயு கசிவு உணரப்பட்ட 20 நிமிடங்களில், முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் பாதுகாப்பு குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 100 மீட்டர் சுற்றளவு வரை குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கப்பலில் இருந்து அமோனியாவை எண்ணுார் உர ஆலைக்குச் கொண்டுச் செல்ல குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாகவும், குளிரூட்டும் கருவி சரியாக வேலை செய்யாததாலும் வாயு கசிந்த முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாயு கசிவால், ஏறத்தாழ 60 பேர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், ஐந்து பேர் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் கோரமண்டல் ஆலை இயங்குகிறது. அதன் கட்டமைப்புகள் குறித்து கடல்சார் வாரியம் கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோரமண்டல் ஆலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கப்பலில் அமோனியம் கொண்டு வரப்படும் கட்டமைப்புகள், ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்கிறோம். 1996லிருந்து ஆலை செயல்பட்டு வருகிறது.
'இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. வாயு கசிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்' என்று வாதிட்டார்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'அமோனியா வாயு கசிவால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஆபத்தான ஆலைகளை மூட வேண்டும்' என வாதிட்டனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக தீர்ப்பாயம் கூறியது.
பின்னர், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
விபத்துகள் நடக்கின்றன என்பதற்காக ஆலையை மூடி விட முடியாது. ஆனால், தொழிற்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கடமை.
அமோனியா வாயு கசிவுக்கு காரணமானோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்படும்.
அமோனியா கசிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கடல்சார் வாரியம், மீன்வளத் துறை, தொழில், பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்துவிரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 8ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.