வணிக வளாகங்களில் 'சிசிடிவி' கட்டாயம்: திருத்தணி கூடுதல் எஸ்.பி., அறிவுறுத்தல்
வணிக வளாகங்களில் 'சிசிடிவி' கட்டாயம்: திருத்தணி கூடுதல் எஸ்.பி., அறிவுறுத்தல்
UPDATED : ஜூன் 27, 2026 05:33 PM
ADDED : ஜூன் 27, 2026 04:10 PM
திருத்தணி:திருத்தணியில் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு, அனைத்து வணிக வளாகங்களிலும், கட்டாயமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் அறிவுறுத்தியுள்ளார்.
திருத்தணி நகராட்சியில், கடந்த சில நாட்களாக, மர்ம நபர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து பணம், நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதாரணமாக, இந்த மாதம் 4ம் தேதி, திருத்தணி - அரக்கோணம் சாலையில், ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 55 சவரன் நகையை திருடிச் சென்றார்.
மேலும், கடந்த 20ம் தேதி, திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில், ஹார்டுவேர் கடையில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இதுதவிர, இம்மாதத்தில் மட்டும், 5 இரு சக்கர வாகனங்கள் திருடு போயின.
இதையடுத்து, நேற்று திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் கூறியதாவது:
திருத்தணியில் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக, தனிப்படைகள் அமைத்து, திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறோம். பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை, பழுது பார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், புதிதாக 100 கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
திருத்தணி நகராட்சியில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு, அனைத்து வணிக வளாகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயம்.
இது தவிர, விரைவில் நகை கடைக்காரர்கள், திருமண மண்டபம், தனியார் விடுதி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து அறிவுறுத்தப்படும். குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
