/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிலத்தடிநீர் உவர்ப்பாக மாறுவதால் விவசாயம்... பாதிப்பு:60 கிராமங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
/
நிலத்தடிநீர் உவர்ப்பாக மாறுவதால் விவசாயம்... பாதிப்பு:60 கிராமங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
நிலத்தடிநீர் உவர்ப்பாக மாறுவதால் விவசாயம்... பாதிப்பு:60 கிராமங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
நிலத்தடிநீர் உவர்ப்பாக மாறுவதால் விவசாயம்... பாதிப்பு:60 கிராமங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
ADDED : ஜூலை 27, 2025 09:45 PM

பொன்னேரி, ஜூலை 28- நீர்நிலைகளை உரிய முறையில் பாதுகாக்க தவறியதால், நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி, 60 கிராமங்களில், 6,000 ஏக்கர் பரப்பில் விவசாயம் பாதித்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த நரசிங்கமேடு, மூலத்தாங்கல், ஜானகிராமபுரம், வடக்குப்பட்டு, ஆமூர், கங்கையாடிகுப்பம், அனுப்பம்பட்டு, உத்தண்டிகண்டிகை உள்ளிட்ட 60 கிராமங்களில், 6,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த கிராமங்களில் சொர்ணவாரி, சம்பா என, ஆண்டுக்கு இரு பருவங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டு வந்தனர். இதற்காக, ஆழ்துளை கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தினர். மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர் நல்ல நிலையில் இருந்தது.
மூன்று ஆண்டுகளாக இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துஉள்ளனர். இக்கிராமங்களின் அருகில் ஆமூர், எலவம்பேடு, தடப்பெரும்பாக்கம், அனுப்பம்பட்டு என, 10க்கும் அதிகமான பாசன ஏரிகள் உள்ளன.
வேதனை மழைக்காலங்களில் இவற்றில் தேக்கி வைக்கப்படும் மழைநீரால், சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு வந்தது. மூன்று ஆண்டுகளாக இந்த ஏரிகளில், பல்வேறு சாலை திட்டப் பணிகளுக்காக மண் அள்ளப்படுகிறது. இதற்காக, ஏரியில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கப்படுவதில்லை.
இதில் தேங்கும் குறைந்தளவு தண்ணீரையும், மண் அள்ள திட்டமிடுபவர்கள் பாசனத்திற்கு பயன்படுத்துவதாக கூறி, வெளியேற்றி விடுகின்றனர்.
இதனால், கோடைக்கு முன்பாகவே ஏரிகள் வறண்டு விடுகின்றன. ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடல்நீர் உட்புகுவதால், தண்ணீர் உவர்ப்பாக மாறுகிறது. இந்த உவர்ப்பு நீரை நெற்பயிர்களுக்கு பயன்படுத்தும்போது, அதன் வளர்ச்சியும், மகசூலும் பாதிக்கிறது.
கடந்த காலங்களில், 1 ஏக்கருக்கு, 30 - 35 மூட்டைகள் நெல் மகசூல் கிடைத்த நிலையில், தற்போது, 20 மூட்டைக்கும் குறைவாகவே கிடைப்பதாக, விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கண்காணிக்க வேண்டும் இதே நிலை தொடர்ந்தால் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என, கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளாக ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் உவர்ப்பு நீரை பயன்படுத்த முடியவில்லை. எங்கள் கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக மாறியுள்ளன. மழையை மட்டுமே நம்பியுள்ளோம்.
உவர்ப்பு நீரை பயன்படுத்துவதால், மண் வளமும் பாதிப்படைந்துள்ளது. நீர்வளத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏரிகளில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும். பாசன ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
அப்போது தான் ஏரிகளில் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியும். ஏரிகளில் இருந்து தண்ணீர் எதற்காக வெளியேற்றப்படுகிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும். பருவ மழைக்கு முன் இப்பணிகளை மேற்கொள்ளாவிட்டால், விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.