/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண்வளம் ஆய்வு செய்து பயிரிட வேளாண் துறை ஆலோசனை
/
மண்வளம் ஆய்வு செய்து பயிரிட வேளாண் துறை ஆலோசனை
ADDED : மே 27, 2025 08:16 PM
திருவள்ளூர்:'குறுவை சொர்ணவாரி பருவம் தொடங்கும் முன், விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளம் ஆய்வு செய்து பயிரிட வேண்டும்' என, வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கலாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் குறுவை சொர்ணவாரி பருவம் தொடங்கும் முன்பாக தங்களது நிலங்களில் மண் மாதிரி சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து மண் வள அட்டை பெற்று அதன் அடிப்படையில் உரங்களைப் பயன்படுத்தலாம். மண்ணின் ரசாயண குணங்களும் பயிருக்கு கிடைக்ககூடிய சத்துக்களின் அளவையும் மண் பரிசோதனையின் மூலமே தெரிந்துகொள்ள இயலும்.
மண்ணின் தன்மைகளை கண்டறியவும், களர், உவர் மற்றும் அமில நிலங்களை கண்டறிந்து சீர்ப்படுத்தவும் பயிருக்கு கிடைக்க கூடிய சத்துக்களின் அளவை அறிந்து சமச்சீர் உர சிபாரிசு செய்யவும் மண் பரிசோதனை அவசியமாகிறது.
மாவட்டத்தில் ஒரே வகையான பயிர்களைத் தொடர்ந்து பயிரிடுவதாலும், அளவுக்கு அதிகமான ரசாயண உரங்களைப் பயன்படுத்துவதாலும், மண்ணில் உள்ள பிரச்சனைகளை கண்டறியாமல் பயிரிடுவதாலும் எதிர்பார்க்கும் மகசூல் கிடைப்பதில்லை.
எனவே, திருவள்ளூர் மாவட்ட விவசாமிகள் தங்களது நிலத்தில் மண்ணை ஆய்வு செய்து, அதனடிப்படையில் உர மேலாண்மையைக் கையாண்டு மண் வளத்தைக் காக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.