/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எட்டு மாதமாக காத்திருக்கும் வேளாண் அலுவலகம்
/
எட்டு மாதமாக காத்திருக்கும் வேளாண் அலுவலகம்
ADDED : ஜன 17, 2024 10:10 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், பாழடைந்த பழைய கட்டடத்தில், வட்டார வேளாண் விரிவாக்க மையம் இயங்கி வந்தது. அதை, ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையமாக தரம் உயர்த்தி, புதிய கட்டடம் நிறுவ, 1.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த 2022 ஜூலை மாத துவக்கத்தில், கும்மிடிப்பூண்டி தி.மு.க, - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், புதிய கட்டட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.
தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம், 3,000 சதுர அடி கொண்ட புதிய கட்டடத்தில், வேளாண் துறை, வேளாண் வணிக துறை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை இயங்க உள்ளன.
திட்டமிட்டப்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 2023 மே மாதம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன. பணிகள் நிறைவு பெற்று எட்டு மாதங்கள் கடந்தும், இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வேளாண் துறை அலுவலர் கூறுகையில், 'கட்டட பணிகள் முடிந்த நிலையில், அலுவலகத்திற்கு தேவையான கணினி உள்ளிட்ட உபகரணங்கள், 'எல்காட்'ல் இருந்து பெற வேண்டி உள்ளது.
'உபகரணங்கள் வந்ததும் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்படும்' என தெரிவித்தார்.