/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனகவல்லிபுரம் துணை மின்நிலைய பணி எப்போது? துறை அமைச்சர் உறுதியால் மக்கள் எதிர்பார்ப்பு
/
கனகவல்லிபுரம் துணை மின்நிலைய பணி எப்போது? துறை அமைச்சர் உறுதியால் மக்கள் எதிர்பார்ப்பு
கனகவல்லிபுரம் துணை மின்நிலைய பணி எப்போது? துறை அமைச்சர் உறுதியால் மக்கள் எதிர்பார்ப்பு
கனகவல்லிபுரம் துணை மின்நிலைய பணி எப்போது? துறை அமைச்சர் உறுதியால் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 01, 2025 12:44 AM
திருவள்ளூர், திருவள்ளூர் அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில், இடம் கிடைத்தும், துணை மின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் தெரிவித்துள்ளதால் நம்பிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிப்போருக்கு, தற்போது அரக்கோணம் அடுத்த மோசூரில் இருந்து மின்சாரம் பெறப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, திருவள்ளூர் - மணவாளநகர், காக்களூர், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துணை மின்நிலையங்கள் அமைத்து, விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மோசூரில் பழுது ஏற்பட்டால், திருவள்ளூர் மாவட்டமே இருளில் மூழ்கிவிடும். தற்போது கும்மிடிப்பூண்டி, காக்களூர், பொன்னேரி, மப்பேடு உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
மின் தேவையும் அதிகரித்து உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் மின்நிலையங்கள் அமைத்தால் தான் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதையடுத்து, 2011 - 12ம் ஆண்டு திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் கனகவல்லிபுரம் கிராமத்தில், 230 கி.வாட் துணை மின் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்காக, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 14.88 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு, 3.24 கோடி ரூபாய் செலுத்த இருப்பதாக மின்வாரியம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மின்வாரிய தலைமையகம், கனகவல்லிபுரத்தில் திட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனால், 50க்கும் மேற்பட்ட கிராமவாசிள் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கனகவல்லிபுரம் கிராமத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும் என உறுதியளித்த நிலையில், தற்போது வரை பணி துவங்கவில்லை.
சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கனகவல்லிபுரம் மற்றும் திருவாலங்காடு ஆகிய இரண்டு துணை மின் நிலையங்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக, அமைச்சர் தெரிவித்தார். இதனால், திருவள்ளூர் மாவட்ட மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

