/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆண்டார்குப்பம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தீவிரம்
/
ஆண்டார்குப்பம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தீவிரம்
ஆண்டார்குப்பம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தீவிரம்
ஆண்டார்குப்பம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தீவிரம்
ADDED : ஏப் 16, 2025 02:08 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருக்குளம் பராமரிப்பு இன்றி துார்ந்துள்ளது.
கடந்த 2021 டிசம்பர் மாதம் கோவிலில் ஆய்விற்கு வந்த ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், திருக்குளத்தை சீரமைத்து தரும்படி பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். திருக்குளத்தை சீரமைப்பதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு கோவில் குளத்தை புதுப்பிக்க, தமிழக அரசு 1.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாயிலாக, உடனடியாக அதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.
கோவில் குளத்தை சுற்றிலும் இருந்த புதர்கள் அகற்றி துார்வாரப்பட்டது. குளத்தை சுற்றிலும், உள்பகுதி முழுதும் பாறை கற்கள் பதிக்கப்பட்டன. தற்போது, சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளத்தை சுற்றிலும் சோலார் மின்விளக்குகள் மற்றும் நடைபாதை ஆகிய பணிகள் நடைபெற உள்ளன.
நடப்பாண்டு ஆடிக்கிருத்திகைக்கு முன், குளத்தை புதுப்பித்து பயனுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு, விறுவிறுப்பாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பக்தர்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, தற்போது கோவில் குளத்திற்கு விமோசனம் கிடைத்துள்ளது.

