ADDED : பிப் 06, 2024 09:29 PM
திருவள்ளூர்:அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பயிலும், பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு, அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு, இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நடப்பாண்டில் புதியது மாணவர்கள், https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில், வரும், 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தையோ அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

