/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர்கள் சூழ்ந்த ஆரம்பாக்கம் ரயில் நிலையம்
/
புதர்கள் சூழ்ந்த ஆரம்பாக்கம் ரயில் நிலையம்
ADDED : டிச 09, 2024 02:15 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை சென்ட்ரலில் இருந்து, ஆந்திரா, பீஹார், ஓடிசா, மேற்கு வங்கம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் பாதையில் தமிழகத்தின் கடைக்கோடி ரயில் நிலையமாக ஆரம்பாக்கம் உள்ளது.
ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை, நெல்லுாரில் இருந்து, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
அதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், வேலைக்கு செல்பவர்கள் என, தினசரி ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் பயணிக்கின்றனர். ஆரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து தேவையை ஆரம்பாக்கம் ரயில் நிலையம் பூர்த்தி செய்து வருகிறது.
ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் ஆரம்பாக்கம் ரயில் நிலைய வளாகம் முழுதும் குப்பை குவியல்களும், முகப்பு பகுதியில் புதர்கள் சூழந்தும் காணப்படுகின்றன.
சுகாதாரமற்ற நிலையில் உள்ள ரயில் நிலைய வளாகத்தை கண்டு ரயில் பயணியர் முகம் சுளிக்கின்றனர்.
முக்கிய ரயில் பாதையில் தமிழகத்தின் முதல் ரயில் நிலையம், அவல நிலையில் இருப்பது அனைவரையும் வேதனை அடைய செய்கிறது. ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.